இறை மறை அல்குர்ஆனின் முதல் வசனமே ‘ இக்ரஃ ‘ வாசிப்பீராக…! என்றே துவக்கம் பெறுகிறது. ‘அல் கலம் ‘ எழுது கோல் என்ற பெயரிலேயே குர்ஆனில் ஓர் அத்தியாயம் இடம் பெறுகிறது.

அணுகுண்டு ஒருமுறைதான் வெடிக்கும். ஆனால், ஒரு புத்தகம் திறக்கிற போதெல்லாம் வெடிக்கும் என்றான் ஓர் அறிஞன்.

ஒரு புத்தகத்தைப் படிப்பது ஒரு நண்பனைப் பெறுவது போல. மீண்டும் படிப்பது பிரிந்த நண்பனை மீண்டும் சந்திப்பது போல என்றான் இன்னொரு அறிஞன்.

ஒருவனின் வாழ்வு , அவன் வாழ்ந்த வயதை வைத்துக் கணிக்கப்படுவதல்ல. அவன் வாசித்த புத்தகங்களின் எண்ணிக்கையை வைத்தே கணிக்கப்படும் என்றான் வேறொரு அறிஞன்.

இந்த வகையில்… நீண்ட நாட்களாக,

நல்ல தரமான, காலத்திற்குத் தேவையான
முக்கிய தலைப்புகளில், எல்லாரும் எளிய முறையில் படிக்கும் வகையில், ஒரு சிறு பயணத்தில் படித்து முடிக்கத் தக்க தரமான நூல்களை வெளியிட வேண்டும் என்ற கனவு, எங்கள் இதயங்களில் ஓடிக் கொண்டி ருந்தது. அந்தக் கனவு இப்போது நிஜமாகி உள்ளது. அல் ஹம்து லில்லாஹ்.

தொடர்ந்து இதுபோன்ற நூல்களை வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் ‘ தோழமை பதிப்பகம் ‘ துவங்கி உள்ளோம். அதற்கான உதவியை, எல்லாம் வல்ல இறைவனிடமும், முழுமையான ஒத்துழைப்பை வாசகர்களாகிய உங்களிடமும் வேண்டுகிறோம்.